தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பரப்புரை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், தாராபுரத்தில் நாளை (மார்ச் 30) பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். மோடியுடன் ஒரே மேடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்துப் பேசிய எல். முருகன், "நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தாராபுரம் பகுதிக்கு இதுவரை எந்தப் பிரதமரும் வந்ததில்லை. முதல் முறையாகப் பிரதமர் மோடி நாளை வருகிறார். அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மக்களிடையே உரையாற்ற உள்ளார்.
இதில் திருப்பூர் மாவட்ட அனைத்து அதிமுக பாஜக வேட்பாளர்கள், அரவக்குறிச்சி, மொடக்குறிச்சி, கோவை தெற்கு பாஜக வேட்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். இந்தப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு அரசியல் களத்தில் மாபெரும் எழுச்சியை உண்டாக்கப் போகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரையும் அவரது தாயாரையும் ஆ. ராசா அவதூறாகப் பேசியுள்ளார். ஆனால் அவர் மீது ஸ்டாலின் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய ராசாவிற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடையே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். வரும் தேர்தலில் மக்கள் இதற்குச் சரியான பாடம் புகட்டுவார்கள். திமுக மீண்டும் வீழ்ச்சி அடையும். அதிமுக பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்" என்றார்
இதையும் படிங்க: குஷ்பு சிறந்த பேச்சாளர், திறமைசாலி என முதலமைச்சர் புகழாரம்!