திருப்பூர் மாவட்டம் ரேணுகா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கௌசல்யா - ரமேஷ் தம்பதியினர். இவர்கள் டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். கௌசல்யா மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அவர் பணி முடிந்து குமரன் சாலை வழியாக வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, தனியார் கல்லூரி பேருந்து மோதி கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் கௌசல்யா நூலிழையில் உயிர் தப்பும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கை மற்றும் இடுப்பு பகுதிகளில் லேசான காயத்துடன் அவர் தப்பியுள்ளார். இதனையடுத்து கௌசல்யா திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.