ஆதார் அட்டை என்பது பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை போன்ற குடியுரிமைக்கான சான்று அல்ல, அடையாளத்திற்கு மட்டுமே. ஆதார் அடையாள அட்டையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியது.
அதேநேரம் ஆதாருக்கு தடை விதிக்கவும் மறுத்து தீர்ப்பளித்தது. இதனால் பல்வேறு அரசு சேவைகள் மற்றும் மத்திய அரசின் உதவிகளைப் பெற ஆதார் அவசியம் என்றாகிவிட்டது. 'ஆதார் அட்டை' இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் பன்னிரெண்டு இலக்க எண்களைக் கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயருடன், அவரது பெயர், புகைப்படம், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆதார் எண் சமையல் எரிவாயு மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்ட சேவைகளைப் பெற உதவுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் ஒன்பது தாலுகா அலுவலகங்களில் பொது இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. எல்காட் மூலமாக ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் பொது இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
புதுவாழ்வு மையங்கள் சார்பில் குண்டடம், பல்லடம் ஒன்றியங்களில் 42 இடங்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 185 இடங்களில் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க திருத்தங்கள் மேற்கொள்ள தினமும் ஏராளமான பொதுமக்கள் விண்ணப்பித்து வந்தனர்.
இதனிடையே தற்போது அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் மட்டுமே ஆதார் கார்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுவதால் அரசு அலுவலகங்களில் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் தினமும் 80 பேருக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அதேபோல் தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உள்ள ஆதார் மையங்களில் தினமும் 40 பேருக்கு மேல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கரோனா காலம் என்பதால், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் 40 பேருக்கும்; தாலுகா அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உள்ள ஆதார் மையங்களில் 20 பேருக்கும் நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆதார் மையங்களில் தினம்தோறும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதுகுறித்து ஆதார் மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கூறுகையில், 'ஆதார் மையங்களில் நாள்தோறும் பொதுமக்கள் புதிய ஆதார் எடுக்க அல்லது ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ள வந்த வண்ணம் உள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். மேலும் ஆதாருக்கு விண்ணப்பிக்க மற்றும் திருத்தங்கள் செய்யத் தேவையான ஆவணங்கள் குறித்து அலுவலக முகப்பிலேயே அறிவிப்புகள் வைத்துள்ளோம். கரோனாவிற்கு முன்னர் 80 பேர் வரை, தினமும் டோக்கன் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது கரோனா காலம் என்பதால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் பொருட்டு 40 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.
புதிய ஆதார் எடுக்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. அதில் திருத்தங்கள் மேற்கொள்ள மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ஆதார் எடுக்க வேண்டுமென்றால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைமை ஏற்படுகிறது. டோக்கன் வாங்குவதற்காக, ஆதார் மையம் திறப்பதற்கு முன்னதாகவே வந்து நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும் திருத்தங்கள் செய்ய உரிய ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பித்தாலும்; திருத்தங்கள் செய்து வந்த ஆதாரில் ஏதேனும் சிறு தவறுகள் இருக்கிறது. அதனை மாற்ற மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆதார் எடுக்க முனையும்போது நிகழ்கிறது. இதனை அதிகாரிகள் சிறிது கவனம் கொண்டு செயல்பட்டால், பொதுமக்களுக்கு ஆதார் பெற எளிதாக இருக்கும். மேலும் தற்பொழுது ஆதார் மையங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆதாருக்கு விண்ணப்பிக்கவும் அல்லது புதிதாக ஆதார் எடுக்கவும் அரசு அலுவலகங்கள் அல்லது பங்குகளை மட்டுமே நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஆதார் மையங்களின் எண்ணிக்கையை அரசு அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சசிகலா சொந்த ஊரில் ஆரவாரம்.. விரைவில் ஆட்சியில் அமர்வார் என தொண்டர்கள் நம்பிக்கை!