திருப்பூர் மாவட்டம் தாராபுரம், சின்னக்காம்பாளையம், கொளத்துப்பாளையம் பேரூராட்சிகள் மற்றும் அதைச்சுற்றியுள்ள அலங்கியம், மணக்கடவு, கவுண்டச்சிபுதூர், மாம்பாடி உள்ளிட்ட ஊராட்சிகளின் குடிநீர் ஆதாரமாக அமராவதி கூட்டுக் குடிநீர் திட்டம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தாராபுரம் பகுதியில் தற்போது கோடை காலம் என்பதால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் அமராவதி ஆறு தண்ணீர் இன்றி வறண்டது. எனவே, தாராபுரம் பகுதிகளுக்கு அமராவதி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கூடுதலாக தண்ணீர் பெறப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அது அப்பகுதி குடிநீர் தேவைக்கு போதுமானதாக இல்லை. எனவே அமராவதி ஆற்றில் தாராபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் தாராபுரம் பகுதிக்கு வந்தது. இதனால் புதிய ஆற்றுபாலம், பழைய ஆற்று பாலம், அலங்கியம் சாலையில் உள்ள ஆற்றுப்பாலம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!