திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பராயன், "இந்திய பிரதமர் உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை சிறிதும் மதிக்காமல் நடந்து கொண்டார். மருத்துவ சிகிச்சை உரிய நேரத்தில் மேற்கொண்டிருந்தால் இந்தியாவில் கரோனா உச்ச நிலையை அடைந்திருக்காது.
கரோனா அலையை தடுக்காமல் இருந்தது மோடி அமைச்சரவை இந்தியாவிற்கு செய்த துரோகம். மாநில அரசையே கேட்காமல் ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்களுக்கும் உரிய சிகிச்சை தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மாநில அரசை கேட்காமல் செய்வது என்பதை எற்றுக்கொள்ள முடியாது.
பழிவாங்கும் நோக்கில், கேரளாவிற்கு தடுப்பு மருந்துகள் மிகக் குறைவாக மத்திய அரசு வழங்கியுள்ளது. தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் நிச்சயம் லாப நோக்கில் தான் இயங்குகின்றன. இந்தியாவில் உள்ள பொதுத்துறை மருந்து நிறுவனங்களுக்கு தடுப்பூசி உற்பத்தி செய்ய அனுமதி அளித்து அவற்றை ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
கட்சி பேதமின்றி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி, ஆக்சிஜன் போன்ற மருத்துவ உபகரணங்களை மத்திய அரசு வழங்க வேண்டும். தொற்று உறுதியானால் , பாதிக்கப்பட்டவரை சொந்த வாகனம் வைத்து மருத்துவமனைக்கு வர சொல்வது கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வாகனம் உள்ளிட்டவற்றை அரசு செய்ய வேண்டும்" எனவும் தெரிவித்தார்.