திருப்பூர் மாவட்டம் அலகுமலையில், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் 4ஆவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று (ஜன.31) நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். போட்டியை தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக அலகுமலை அடிவாரத்தில் வாடிவாசல் மற்றும் 400 அடி நீளத்தில் வாடிவாசலின் இருபுறமும் பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. வாடிவாசலில் இருந்து வெளியே வரும் காளைகள், வீரர்களுக்கு காயம் படாமல் இருக்க தேங்காய் நார் (மஞ்சு) தரையில் தூவப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டின் போது வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க மருத்துவர்குழு கொண்ட மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 1,040 காளைகளும், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடைத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மாடுபிடி வீரர்கள் கண்டிப்பாக கரோனா பரிசோதனை சான்றுடன் வந்தால் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு போட்டி நடைபெறும் இடத்தை சுற்றிலும் 6 இடங்களில் அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியன செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு பெயர் சூட்டிய ஆட்சியர்