திருப்பூரில், நேட்டீவ் மெடிக்கேர் என்ற தனியார் தொண்டு நிறுவனம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்துவருகிறது.
இந்நிலையில், அத்தொண்டு நிறுவனம் சார்பில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர் சங்க அலுவலத்தில் நடைபெற்றது. இதில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இது குறித்து மெடிக்கேர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய அலுவலர் பேசுகையில்,
"எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்குவதோடு, பாதிக்கப்பட்டவருக்கு நோய் தொற்று அதிகரிக்காமல் இருக்கத் தேவையான மருந்து மாத்திரைகளை அரசின் உதவியோடு இலவசமாக மெடிக்கேர் தொண்டு நிறுவனம் வழங்கிவருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 250 பேர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர்" எனக் கூறினார்.
மேலும், மெடிக்கேர் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் நான்கு ஆண்டுகள் தங்கி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருவதாக தெரிவித்தார்.
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பு சுய உதவி குழுக்கள் அமைத்து சுயமாக தொழில் தொடங்க வங்கிகள் மூலம் தேவையான கடனுதவி பெற்றுத் தருவதற்கான முயற்சிகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.