திருப்பூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைப்படங்களை வெளியிடுவது தொடர்பாக, திருப்பூரில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இன்று (டிச.28) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி அன்று மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினர் எங்களிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் மட்டுமே வெளியிட வேண்டுமென விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் காத்திருந்தனர்.
அவர்கள் நினைத்திருந்தால் ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் இருந்ததற்கு எனது மனப்பூர்வமான நன்றி. ஜனவரி 1ஆம் தேதி முதல் நூறு விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என ஏற்கனவே முதலமைச்சரிடம் மனு அளித்திருந்தோம். இதுதொடர்பாக மீண்டும் ஒருமுறை முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கவுள்ளோம்.
அனைத்து ஓடிடி தளங்களும் விஜய்யிடம் போட்டி போட்டுக்கொண்டு மாஸ்டர் படத்தை கேட்டனர். ஆனால் விஜய் தீர்க்கமான முடிவெடுத்து திரையரங்குகளில் வெளியீடு செய்கிறார். அவரைப் போலவே அனைத்து நடிகர்களும் முடிவெடுக்க வேண்டும். திரையரங்கு வெளியீடு தொடர்பாக அனைத்து மொழியைச் சேர்ந்த பெரிய நடிகர்களும் அவரவர் மாநில முதலமைச்சர்களைச் சந்திக்கின்றனர். அந்த வகையில் அனைத்து நடிகர்களும் இணைந்து தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்திருக்க வேண்டும்.
இருப்பினும், விஜய் மட்டும் முதலமைச்சரை சந்தித்ததை வரவேற்கிறோம். திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யும்போதே படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி எட்டு வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க வேண்டும்.
பொங்கலுக்கு புதிய படங்களின் வெளியீட்டின்போது கட்டணத்தை குறைப்பது தொடர்பாக அரசுடன் பேசி முடிவெடுக்கப்படும். ஆனால் நிச்சயம் கட்டண உயர்வு இருக்காது. திரையரங்கை புறக்கணிக்கும் நடிகர்களின் படத்தை நாங்களும் புறக்கணித்தால் என்ன தவறு. அது பற்றி சங்கத்தினருடன் ஆலோசித்து இறுதி முடிவைத் தெரிவிப்போம்" என்றார்.
இதையும் படிங்க: நாளை வெளியாகிறது மாதவனின் ’மாறா’ டிரைலர்!