திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த குப்புசாமிநாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரது கணவர் பிரபு. இவர்களுக்கு பிருந்தா (7), பிரசந்தா (4) என, இரு பெண் குழந்தைகள் இருந்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக, தனது கணவரை பிரிந்து குடும்பத்தினருடன் தமிழ்செல்வி வசித்து வருகிறார். தமிழ் செல்வியின் வீட்டார், அவரது கணவர் பிரபுவுடன் சேர்ந்து வாழ பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கு தமிழ்செல்வி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெற்றோரின் தொடர் வற்புறுத்தலால் மனமுடைந்தத் தமிழ்செல்வி, எலி மருந்தை இரு குழந்தைகளுக்கும் கொடுத்து, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அது தோல்வியில் முடிந்ததும், நேற்று (ஏப்.28) மீண்டும் குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான எலி மருந்தைக் கொடுத்து, தானும் சாப்பிட்டுள்ளார். மூவரும் உயிருக்கு போராடியபோது, எலி மருந்து உட்கொண்டதைத் தனதுபெற்றோரிடம் தமிழ்செல்வி எடுத்துக்கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், மகள், பேத்திகள் இருவரையும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி குழந்தைகள் இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது தமிழ்ச்செல்வி சிகிச்சை பெற்றுவருகிறார். தகவலறிந்த பல்லடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறில் குழந்தைகளுக்குத் தாயே விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.