திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆலத்தூரில் உள்ள தனியார் நூற்பாலையில் சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திவருவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருந்தன. இதைடுத்து திருப்பூர் குழந்தைகள் பாதுகாப்பு அவரச உதவி மைய அலுவலர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையம் மற்றும் குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் இன்று அந்த தனியார் நூற்பாலையில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.
சோதனையின்போது நூற்பாலையில் பணிபுரிந்துவந்த 37 சிறுமிகள், 3 சிறுவர்கள் என 40 வளரிளம் சிறார்கள் அவர்களால் மீட்கப்பட்டனர். மேலும், இதற்காக அந்த நூற்பாலையின் உரிமையாளர் மீது குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறார்கள் பல்லடம், தண்ணீர் பந்தல், பெரியார் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள இயங்கிவரும் காப்பகங்களில் குழந்தை நலக்குழுவினரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு, அவர்கள் அனைவருக்கும் இன்று சளி, காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கண்டறிதல் சோதனை முடிவுகள் பெறப்பட்ட பின்பு, அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு, அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 8,728 குழந்தைத் தொழிலாளர்கள் (2016-2017ஆம் ஆண்டில் 2,850 குழந்தைகளும், 2017-2018ஆம் ஆண்டில் 2,855 குழந்தைகளும், 2018-2019ஆம் ஆண்டில் 3,021 குழந்தைகளும்) மீட்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர்நலத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.