திருப்பூர் அருகே நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்-கிருத்திகா தம்பதி. இவர்களது மகள் சிவன்யா (2). இரண்டு வயதான சிவன்யாவிடம் பல வண்ண படங்களைக் காண்பித்து அவற்றின் நிறம் என்ன எனக் கேட்டால், மழலை மொழியில் மிகச்சரியாக பச்சை, நீலம், சிவப்பு என 12 வண்ணங்களையும் மாற்றி கேட்டாலும் தெளிவாகப் பதில் சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
சிவன்யாவின் இந்த ஆற்றலை, அவரது பெற்றோர் சாதனையாக மாற்ற முயற்சித்து, நோபல் சாதனைக்கு விண்ணப்பித்தனர். இதையடுத்து நோபல் உலக சாதனை அமைப்பின் சிஇஓ அரவிந்த் தலைமையில் குழுவினர் இன்று திருப்பூர் வந்தனர். இந்தக் குழுவினரின் கேள்விக்கு சிவன்யா சரியான வண்ணங்களைக் காண்பித்து மெய்சிலிர்க்க வைத்தார்.
இதனையடுத்து, நோபல் உலக சாதனை புத்தகம் நிறுவனம் சார்பில் குழந்தை சிவன்யாவிற்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டன. மழலை மொழியில் ஆங்கிலத்தில் 12 வண்ணங்களின் பெயர்களைக் கூறிய சிவன்யாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இது குறித்து நோபல் உலக சாதனை அமைப்பின் சிஇஓ அரவிந்த் கூறியதாவது, "இதற்கு முந்தைய சாதனையாக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் உலக நாடுகளின் பெயர்கள், அதன் தலைநகரத்தின் பெயரையும் கூறி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அதனை முறியடிக்கும் வகையில் தற்போது 2 வயது பெண் குழந்தை சிவன்யா 12 வண்ணங்களின் பெயர்களைத் தெரிவித்து சாதனை செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஆடிட்டர் குருமூர்த்தி அமைப்பில் இருந்தவர் கைது!