திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது சகோதரி அப்பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பட்டம் பயின்றுவந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் வாணியம்பாடி வழியாக சேலம் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கல்லூரி மாணவிகளை வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையறிந்த அப்துல்லா, தனது சகோதரியை கல்லூரி நேரத்தில் எதற்காக, வரவேற்பு வழங்க வெளியே அழைத்து சென்றீர்கள் என கல்லூரி நிர்வாகத்திடம், தொலைபேசி வாயிலாக விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகம் அவருக்கு விளக்கமளிக்காமல் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, தனக்கு தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் அதிமுக தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, அப்பகுதி அதிமுக நிர்வாகிகளான சதாசிவம், லிங்கநாதன், சுபான் மீது அப்துல்லா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் காவல் துறையினர் புகாரை ஏற்றுக்கொள்ளாமல், அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அப்துல்லா, தான் கொண்டு வந்து மண்ணெண்ணையை ஊற்றி காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். பின் காவல் துறையினர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இளைஞர் காவல் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலிக்கு கத்திக்குத்து!