திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பத்தைச் சேர்ந்தவர் அஜய். இவர் தன்னுடைய பாட்டியை அழைத்துக்கொண்டு கச்சேரி சாலையிலுள்ள தனியார் வங்கிக்குச் சென்றுள்ளார். வங்கியின் முன்பாக நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் அஜய்யிடம் இருந்து செல்போனை பறித்துகொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
செல்போன் பறிப்பு
இச்சம்பவம் குறித்து அஜய் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், செல்போனை கொள்ளையடித்துச் சென்ற இளைஞர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
இளைஞர்கள் கைது
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் நடுபட்டறை கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த பிரேம் சுந்தர் என்பது தெரியவந்தது.
மேலும், இருவரும் செல்போன் கொள்ளையில் ஈடுபட்டிருந்ததையும் காவல் துறையினர் அறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்த செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இளைஞர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: முதியவர்களை குறிவைக்கும் ஏடிஎம் திருடன் கைது