திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சீக்காஜோனை பகுதியைச் சேர்ந்தவர் திருமலை (22). இவருக்கு கடந்தாண்டு திருமணமாகி அர்ச்சனா என்கிற மனைவியும் 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் திருமலை அவருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் வேளாண்மை செய்துவந்துள்ளார்.
நேற்றிரவு பக்கத்து கிராமமான நாயக்கனேரி ஊராட்சிக்குள்பட்ட பள்ளக்கொல்லை பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் திருவிழாவைக் கண்டு களிக்கச் சென்று இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிரில் வந்த சீக்கஜோனை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (15), சந்தோஷ் குமார் (16), சேட்டு, சக்திவேல் உள்ளிட்ட நான்கு பேர் குடிபோதையில் திருமலையை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென போதை சிறார்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து திருமலையின் கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகக் குத்திக் கொலைசெய்துள்ளனர்.
அப்போது திருமலையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து ராஜ்குமார், சந்தோஷ் குமாரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
மேலும் ஆம்பூர் கிராமிய காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சென்ற கிராமிய காவல் துறையினர் படுகாயமடைந்த ராஜ்குமாரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்து அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமாரைக் கைதுசெய்து கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் மலைப்பகுதியில் தலைமறைவாக உள்ள சேட்டு, சக்திவேல் உள்ளிட்ட இருவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.