திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள காலணி விற்கும் கடையின் வெளியே அப்பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) (27) மற்றும் லட்சுமி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) (29) என்ற இரு பெண்களும் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது அங்கு வந்த நபர் ஒருவர், அங்கு படுத்து உறங்கிய பெண்களை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால், இருவருமே ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்து வந்தவர்கள், இருவரையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கௌசல்யா என்ற பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த லட்சுமி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் தான், கத்தியால் குத்தினார் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தேவேந்திரனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
அதில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் தேவேந்திரனுக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக லட்சுமி, தேவேந்திரனை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன், லட்சுமியை தேடி நேற்று நள்ளிரவு ஆம்பூர் பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கு வந்து சாலையோரம் இருந்த காலணி கடையின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த லட்சுமியைத் தான் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். அப்போது, உடனிருந்த கௌசல்யா என்ற பெண் தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கௌசல்யாவின் தொண்டை பகுதியில் கத்தி பாய்ந்தது.
இதனையடுத்து, தேவேந்திரனை ஆம்பூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், உயிரிழந்த கௌசல்யாவின் உடல், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த கௌசல்யாவிற்கு மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளியிடம் நகைகளை பறித்த பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை!