திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(டிச.20) மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. வாணியம்பாடி காஜா நகர் பகுதியைச் சேர்ந்த புரானுள்ளா(37), அவரது மனைவி பர்வீன் பானு(35), மகள் அர்ஷியா(13) ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
அப்போது பர்வீன் பானு, பத்து வருடமாக தன்னுடைய கணவர் புரானுள்ளாவிற்கு வேலை கொடுக்காமல் அழைக்கழித்து வரும் வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்தும், வேலை கொடுக்க வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் கேட்டு கட்டாயப்படுத்துவதாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
கடந்த வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கொரட்டி அடுத்த குமாரன்பட்டியைச் சேர்ந்த மேகநாதன் (35) என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கார் ஓட்டும்போது மாரடைப்பு - உயிரிழந்த ஓட்டுநர்