திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50). இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கோவிந்தராஜ் தனியார் ஓட்டலில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தராஜிக்கும் கல்யாணிக்கும் ஏற்பட்ட குடும்பத்தகராறால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
கல்யாணி தன் மகளின் வீடு இருந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமாலை தண்ணீர் பந்தல் பகுதியில் சிற்றுண்டி கடைநடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மகள் வீட்டிற்கு சென்ற கோவிந்தராஜ், அங்கு தன் மனைவி கல்யாணியுடன் சில நாட்கள் தங்கி இருந்து வந்ததார்.
இன்று (ஏப்.05) காலையில் கோவிந்தராஜின் உறவினர்களுக்கு பேசிய கல்யாணி, தன் கணவர் குடிபோதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்து விட்டார் தகவல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கணவரின் சடலத்தை மூடிய நிலையில் மினி வேன் மூலம் வைக்கோலால் மறைத்து கோவிந்தராஜின் சொந்த ஊரான ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பம் பகுதிக்கு கொண்டு வந்து இறுதி சடங்கு செய்ய முடிவு செய்துள்ளார்.
கோவிந்தராஜின் மரணம் குறித்து கேட்டு, சடலத்தை காண்பிக்க சொல்லி கேட்டதற்கு கல்யாணி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கோவிந்தராஜின் சடலத்தை உறவினர்கள் திறந்து பார்த்தபோது, அவர் கைகள் கட்டப்பட்டு முகம், தலை சிதைந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சடலத்தை புதைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையிலான காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் கோவிந்தராஜ் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து கோவிந்தராஜின் உடலை குடியாத்தம் காவல்துறையினரிடம் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை உடற்கூராய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன என்று கோவிந்தராஜ் மனைவி மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கேபிள் டிவி டெக்னீஷியன் வெட்டிக் கொலை!