திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் புறவழிச்சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி, ஆலோசனைக் கூட்டம் வணிக வரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றியம், பேரூர், ஊராட்சி என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அதிமுகவினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அவர்களில் பெரும்பாலோனோர் முகக்கவசம் அணியாமல் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அரசின் விதிகளைக் கடைப்பிடிக்காமல் அலட்சியமாகக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கடந்த ஐந்து மாதங்களாக கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு ஒரு சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் அரசு சார்பில் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், அமைச்சரின் கூட்டத்திலேயே அரசு விதிகள் மீறப்பட்டது அனைவரையும் முகம் சுளிக்கவைத்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி, "வருகின்ற தேர்தலில் தொடர்ந்து அதிமுக ஆட்சி வெற்றிபெற புதிய இளைஞர்களை உருவாக்கி அடிமட்ட தொண்டர்கள் மூலமாக அதிமுக அரசின் சீரிய திட்டங்களை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும்" எனத் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதேபோல் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கையில் 2008ஆம் ஆண்டு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்த பெருமைக்குரிய மாவட்டம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.