திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட காட்டுக்கொல்லை பகுதியில் ஏழு தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குவாரியில் இருந்து கொண்டுவரப்படும் ஜல்லி, செயற்கை மணல், ஜல்லித் துகள்கள் ஆகியவை லாரிகள் மூலம் காட்டுக்கொல்லை பகுதியிலிருந்து ரங்காபுரம் கென்னடிகுப்பம், விண்ணமங்களம் அய்யனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
கென்னடி குப்பம் பகுதியில் குறுகலான சாலை என்பதால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்வதாலும், சாலைகளில் ஜல்லித் துகள்கள் விழுந்து சாலையோர வீடுகளுக்கு பெரும் இடையூறு விளைவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், கல்குவாரிக்கு சொந்தமான லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.
அதன் பேரில், சாலை மறியலைக் கைவிட்ட கிராம மக்கள், அரசு உடனடியாக சாலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.
இதனால் கென்னடி குப்பம் - வெள்ளக்குட்டை செல்லும் சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், லாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டபோது டிப்பர் லாரி ஒன்று சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் மீது மோதியதில் மின் கம்பம் சேதம் அடைந்து கீழே விழும் நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து, காவல் துறையினர், மின் ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நிகழிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டது.