திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில், ஆண்டுதோறும் காணும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் எருது விடும் திருவிழா கடந்த 50 ஆண்டிற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் வெள்ளக்குட்டை கிராமத்தில் எருது விடும் விழாவிற்கு அனுமதி வேண்டி, விழாக் குழுவினர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். பின்னர், வெள்ளக்குட்டை கிராமத்தினர் வழக்கம் போல எருது விடும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் நேற்று மாலை வரையில் எருது விடும் திருவிழாவிற்கு அனுமதி வழங்காததால், ஆத்திரம் அடைந்த வெள்ளக்குட்டை கிராம மக்கள், வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் சென்ற தனியார் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சரவணன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் அடையாத கிராம மக்கள், வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் காளை மாடுகளை அழைத்து வந்து, சாலையை மறித்து இரவு 10 மணி வரையில் தொடர்ந்து 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ், வாணியம்பாடி வட்டாச்சியர் மோகன், வாணியம்பாடி கோட்டாச்சியர் (பொறுப்பு) பானு ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
எருது விடும் விழாவிற்கு அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் இணையதள முகவரி சரிவர இயங்காததால், விண்ணப்பங்கள் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை எனவும், இதனால் நாளை எருது விடும் விழாவிற்கு அனுமதியில்லை என கூறினர்.
இதனையடுத்து மீண்டும் எருது விடும் விழாவிற்கு அனுமதி வேண்டி இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்து, தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்த பின்னர், மற்றொரு தேதியில் எருது விடும் திருவிழா நடத்திக் கொள்ள அனுமதி அளிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன் பேரில், சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் வெள்ளகுட்டை பகுதியில் பெரும் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த 150 பேர் மீது ஆலங்காயம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
இதையும் படிங்க: திருப்பத்தூரில் தனியார் காலணி தொழிற்சாலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த உள்ளிருப்பு போராட்டம்!