திருப்பத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பாமக மாநிலதுணை பொதுசெயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில மகளிரணி தலைவி நிர்மலா, மாநில துணைத் தலைவர் பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் கிருபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் பாமக கட்சியும், வன்னியர் சங்கமும் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுகீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் மற்ற அரசியல் கட்சிக்கோ, ஆட்சிக்கோ மற்ற சமுதாயங்களை சேர்ந்தவர்களுக்கோ எதிரானதல்ல.
வன்னியர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உள்ள வன்னியர்களின் பங்களிப்பு என்பது அரசு பணிகளில் மிக குறைவாக உள்ளது. இதன் காரணமாக எல்லா கட்சியில் உள்ள வன்னியர்களும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பின்னால் நின்று போராடி வருகின்றனர்.
வன்னியர்களின் கோரிக்கை நியாயமானது என பிற சமுதாயத்தினரும் உணரத் தொடங்கியுள்ளனர். ஆனால் தமிழ்நாடு அரசு சாதி வாரி கணக்கெடுப்பு எனக் காரணம் காட்டி ஆறு மாதம் இழுத்தடிப்பது முறையல்ல. இன்னும் 2 மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வரவுள்ளது. ஆகவே தமிழ்நாடு அரசும் முதல்வரும் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பரிசாக வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா? - ஆர்.எஸ்.பாரதி கலாய்!