திருப்பத்தூர்: வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார் (வயது 59). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ரவிக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் ரவிக்குமாரின் உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார், திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் ரவிக்குமாருக்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்ததாகவும் அதனால் அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து ரவிக்குமார் வசித்து வந்த வீடு மற்றும் அவர் நடத்தி வந்த கடையினை வாணியம்பாடி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நியூ டவுன் பகுதியில் உள்ள கடைகளை 5 நாட்களுக்கு திறக்க கூடாது என வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமார் உத்தரவிட்டு உள்ளார்.
அப்பகுதி முழுவதும் நகராட்சி பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு உள்ளனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு பன்றி காய்ச்சல் சோதனை நடத்த மருத்துவ குழுவினர், விரைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் மாஸ்க் அணிந்து வெளியே வரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வாணியம்பாடியில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திருப்பூரில் வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை!