திருப்பத்தூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டிக் கொடுத்ததாக அரசு அலுவலர்கள் பொய் கணக்கு காட்டிய நிலையில், அவர் இருந்த குடிசை வீடு இன்று(ஜூலை 10) பெய்த மழையில் இடிந்துள்ளது. இதில் அய்யம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்த பெண் அய்யம்மாளின் கணவர் சுப்பிரமணி 10 ஆண்டுகளுக்கு முன், உடல் நலக்குறைவால் இறந்தவிட்ட நிலையில், தனது 13 வயது ராகுல் என்ற மகனுடன் சொந்த வீடு இல்லாமல் ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் மண்சுவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
வீடு தரைமட்டமானது... பெண் மரணம்! வீடு கட்டிக் கொடுத்ததாக பணத்தை உண்டு ஏப்பம் விட்ட அரசு அலுவலர்கள்!
மேலும் 2017- 2018ஆம் ஆண்டில் அப்போதைய ஊராட்சி செயலராக இருந்த நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த வஜ்ஜிரவேல் என்பவர் அய்யம்மாள் உட்பட 9 பேருக்கு தமிழ்நாடு அரசு இலவச வீடு கட்டித் தருவதாக ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு உள்ளிட்டவைகளைப் பெற்றிருக்கிறார். இதன்மூலம் அய்யம்மாளுக்கு வீடு கட்டுவதற்கான தொகையையும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அய்யம்மாளுக்கு வீடு கட்டுவதற்கான தொகையையும், வேறு 8 பேருடைய தொகையையும் வேறொருவருடைய வங்கி கணக்குக்கு மாற்றி வஜ்ஜிரவேல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரிடம் விசாரணை மேற்கொண்டபோது, எட்டு பேருடைய தொகையில், 50 விழுக்காடு பணத்தைத் திருப்பி அளிப்பதாகக் கூறி, உறுதியளித்திருந்தனர்.
மேலும் அய்யம்மாள் வசிக்கும் இடம் ரயில்வே துறைக்குச் சொந்தமானது என்பதால், அவருக்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்வதாக அலுவலர்கள் உறுதியளித்து வந்த நிலையில், நேற்றிரவு முழுவதும் இப்பகுதியில் பெய்த கனமழையால், மண் வீடு இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அய்யம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று, இடிபாட்டில் சிக்கி இறந்த பெண்ணின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் இந்த விபத்திற்கு காரணமானவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உடல் உடற்கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல் துறையினர், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.