திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே 36 பேர் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 28 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 8 பேர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் வாணியம்பாடி கோனாமேடு, உதயேந்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டவையாக அறிவிக்கப்பட்டு அனைத்து பாதைகளையும் அடைக்கும் பணியில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீயணைப்பு மற்றும் பேரூராட்சி வாகனங்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி தலைமையிலான அலுவலர்கள், தொற்றால் பாதிக்கப்பட்ட உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது அவருடன் நானும் வருவேன் இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வதாக அலுவலர்களுடன் அந்த பெண்ணின் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவரை சமாதானப்படுத்திய அலுவலர்கள், தொற்று பாதிக்கப்பட்ட பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குவைத்தில் உயிரிழந்த தமிழர்!