திருப்பத்தூர் மாவட்டம் மண்டல நாயன குண்டா பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் தினேஷ்குமார்(23), பட்டப்படிப்பை முடித்துவிட்டு தங்களது நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து வருகிறார். தினேஷ்குமாரின் கோழிப்பண்ணை அமைந்துள்ள இடத்தை அவரது தந்தை 2006ஆம் ஆண்டு சென்னப்ப நாயுடு என்பவரிடம் வாங்கினார். இந்நிலையில், நடராஜ் உயிரிழந்தபிறகு இந்த இடம் தொடர்பான பிரச்னை தினேஷ்குமாருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த ராஜா(47) என்பவருக்கும் இருந்து வந்துள்ளது.
ராஜா கோழிப்பண்ணை பக்கம் செல்லும் போது தினேஷ்குமாரை திட்டி வம்பிழுத்ததாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 'உனது கோழிப்பண்ணையை சூறையாடிவிட்டு அந்த இடத்தில் நான் விவசாயம் செய்கிறேன்' என்று தினேஷ்குமாரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளின் அலறும் சத்தம்கேட்டு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தினேஷ்குமார் ஓடி வந்து பார்க்கும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் பண்ணைக்கு தீ வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், பண்ணையில் இருந்து 200 கோழிகளை சூறையாடியும் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்த தினேஷ்குமார், ராஜாதான் தனது பண்ணைக்கு தீ வைத்ததாகவும், எரிந்து நாசமான பண்ணைக்கு உரிய இழப்பீடு, தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சாத்தான்குளம் வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்கிறது' : ஜி.கே.வாசன்