திருப்பத்தூர்: ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வில்வநாதனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆம்பூர் புறவழிச்சாலையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "மக்கள் வரிப்பணத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பணத்தில் ஊர் சுற்றுவதற்காகவே இரண்டு விமானங்களை வாங்கியுள்ளார் மோடி. ஆயிரம் கோடி ரூபாயில் புதிய பாராளுமன்ற கட்டடம் திறக்க திட்டம் வகுத்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்காமல் நிதி பற்றாக்குறை என்று கூறி வருகிறது மத்திய அரசு.
சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியபோது காவல் துறையினர் முதலில் கைது செய்தது என்னைதான். நான் தற்போது வேட்புமனு தாக்கல் செய்யும்போது 22 வழக்குகள் உள்ளன. ஆனால் ஒரு வழக்குக்கூட ஊழல் வழக்கு கிடையாது. சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தியது திமுகதான்.
தமிழ்நாட்டில் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் அதிமுகவினர் விற்றுள்ளனர். மேலும் நீட் தேர்வினால் இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தற்போது செவிலியர் படிப்பிற்கும் நீட் தேர்வு கொண்டு வந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்படும்.
பழனிசாமி முதலமைச்சர் ஆனதே சசிகலா காலில் விழுந்துதான், தற்போது அவரது காலையே வாரியுள்ளார். மோடியின் மிகச்சிறந்த அடிமைகள் யார் என்றால் அது ஈபிஎஸ், ஓபிஎஸ் தான்.
அதிமுகவினர் வாக்கு கேட்டு வந்தால் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியைக் கேளுங்கள், அவர்கள் ஓடியே விடுவார்கள். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை மட்டும் கேளுங்கள், யாருக்கும் தெரியாது.
காவல் துறையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதில் எங்கே தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது" என சாடினார்.
மேலும், இறுதியில் ஆம்பூரில் உள்ள மக்களின் மிகப்பெரிய கோரிக்கையான ரெட்டித்தோப்பு மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும் என்றும், தோல் தொழில் பூங்கா திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு போடும் ஓட்டு, மோடிக்கு போடும் ஓட்டு! - உதயநிதி ஸ்டாலின்