திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மின்னூர் ஏரிகோடியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். அரசுப் பள்ளி ஆசிரியரான இவரது மூத்த மகன் ஆஷிஸ் (12) ஆம்பூர் அருகேவுள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், ஆம்பூரில் நேற்றிரவு (ஆக.27) பெய்த கனமழையின்போது வீட்டின் அருகாமையிலுள்ள கடைக்குச் சென்ற ஆஷிஸ், மழையில் நினைந்தபடி வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஈரமான கைகளால் டிவி ஸ்விட்சை அழுத்தியுள்ளார்.
மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதனைக் கண்டு பதறியடித்துக்கொண்ட வந்த பெற்றோர், அவனை உடனடியாக மீட்டு வீட்டின் அருகேவுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் இன்று (ஆக.28) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இறுதி சடங்கு செய்வது தவறு என சிறுவனின் உறவினர்களிடம் எடுத்துரைத்தனர்.
![மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-01-young-boy-dead-vis-scr-pic-tn10018_28082021144832_2808f_1630142312_265.jpg)
இதையடுத்து, சிறுவனின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: பொதுமக்கள் சாலை மறியல்!