திருப்பத்தூர்: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் செல்போனிலேயே முடங்கிக்கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், ஒரு சில மாணவர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்து சாதித்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பத்தூரைச் சேர்ந்த சஞ்ஜெய், குமரன் எனும் நரிக்குறவரின மாணவர்கள் கிக் பாக்ஸிங்கில் சாதிக்க அரசின் உதவியை நாடியுள்ளனர்.
பாச்சல் கிராமத்தில் உள்ள இதயநகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியைச்சேர்ந்தவர் முத்தையன் - வளர்மதி தம்பதியினர். இவரின் மூத்த மகன் சஞ்ஜெய் (19). திருப்பத்தூர் பகுதியில் உள்ள தூயநெஞ்சக கல்லூரியில் பி.ஏ.தமிழ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதயநகர் பகுதியில் கற்பி பயிலகம் தொண்டு நிறுவனத்தைச்சார்ந்த யூதர் மற்றும் வெங்கடேசன் என்பவர்கள், நரிக்குறவர் இன மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு மற்றும் கலை ஆகியவற்றை கற்பிக்க முன்வந்துள்ளனர்.
முதல் முயற்சியிலேயே வெற்றி: இவர்களின் மூலம் சஞ்ஜெய் விளையாட்டுத்துறையில் உள்ள ’உசோ’ என்னும் கிக்பாக்ஸிங் விளையாட்டில் இரண்டு ஆண்டுகளாக, அதி தீவிர பயிற்சி பெற்று, முதல் முயற்சியிலேயே மாநில அளவிலான போட்டியில் சில்வர் பதக்கம் வென்றுள்ளார்.
இதேபோன்று சஞ்ஜெய் தினமும் பயிற்சிக்குச்செல்வதை கவனித்த, அதே பகுதியைச்சேர்ந்த 12ஆம் வகுப்பு பயிலும் குமரன் என்ற மாணவனும் சஞ்ஜெய் உடன் சேர்ந்து, வெங்கடேசன் என்ற கிக்பாக்ஸிங் உடற்பயிற்சியாளரின் பயிற்சியுடன் கிக்பாக்ஸிங்கை பயின்று, இருவரும் மாநில அளவிலான போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
மேலும் சஞ்ஜெய் மற்றும் குமரன் கிக்பாக்ஸிங்கினை, அவர்களது வீட்டின் அருகே உள்ள சிறிய இடத்தில் மேற்கொள்வதால் இவர்களின் பயிற்சிகளை காணும் சிறுவர்களுக்கும் கிக்பாக்ஸிங் மற்றும் இதர விளையாட்டுகளின் மீது ஆர்வம் வருவதாலும், நரிக்குறவர்களுக்கென தனி விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என நரிக்குறவர் இன இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு உதவ கோரிக்கை: இவர்களது கிக்பாக்ஸிங் பயிற்சியாளர் வெங்கடேசன் கூறுகையில், "சஞ்ஜெய் மற்றும் குமரன் என்னிடம் பயிற்சி பெற வரும் பொழுது, இவர்கள் எப்படி கற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், மற்ற மாணவர்களை விட இவர்கள் விரைவிலேயே கிக்பாக்ஸிங் போட்டியில் பங்கேற்று, சில்வர் மற்றும் தங்க பதக்கங்களை வென்று அசத்தினர்.
தற்போது சஞ்ஜெய் அடுத்த வாரம் ஜம்மு - காஷ்மீரிலும், குமரன் கேரளாவிலும் நடைபெறும் கிக்பாக்ஸிங் போட்டியில் பங்கேற்க செல்கின்றனர். இவர்களுக்கு உரிய விளையாட்டு மைதானம் அமைத்து நரிக்குறவ இன சிறுவர்களையும், கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் வளர்க்க அரசு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”, என கேட்டுக்கொண்டார்.
மேலும் கிக்பாக்ஸிங் குறித்து சஞ்ஜெயின் தாயார் வளர்மதி கூறுகையில், “இதுவரையில் நாங்கள் எதுவும் தெரியாமல் தான் இருந்தோம். தற்போது எனது மகன் கிக்பாக்ஸிங் மூலம் வெளியூர்களுக்கு எல்லாம் செல்கின்றான். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களைப்போன்றவர்களுக்கு அரசு உரிய சலுகைகளும், தங்களது பிள்ளைகளுக்கு கல்வியையும், விளையாட்டையும் கற்றுக்கொடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர், இதுகுறித்து குமரனின் உறவினரான தமிழ்ச்செல்வி கூறுகையில், '' எங்கள் பகுதியில் உள்ள இருவர் தங்க பதக்கங்களை வாங்கி வந்துள்ளனர். இதேபோல், இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களும் முன்னேற வேண்டும் என்பது எங்களது கனவு” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேசிய யோகா சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த நரிக்குறவ மாணவர்கள்..!