திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தைப் பகுதியில் இயங்கிவந்த உழவர் சந்தை, தினசரி காய்கறிச் சந்தை உள்ளிட்டவை கரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட பிறகு கடந்த வாரம் உழவர்சந்தை திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று தினசரி காய்கறிச் சந்தை திறக்கப்பட்டது. இந்நிலையில், விவசாயி தமிழ்ச்செல்வன் என்பவருக்கும், வியாபாரி மோனிஷ் குமார் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் தமிழ்ச்செல்வனின் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டதில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மற்ற விவசாயிகள் அனைவரும் உழவர் சந்தைப் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் வியாபாரி மோனிஷ் குமாரை கைதுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு தற்காலிகமாக கலைந்துசென்றனர்.
வாணியம்பாடி உழவர் சந்தை ஒட்டியுள்ள பகுதியில் வியாபாரிகள், விவசாயிகள் இடையே வணிகம் சம்பந்தமான மோதல்போக்கு கடந்த காலங்களில் நிலவிவந்த போதிலும் தற்போது அது கைகலப்பாக மாறி மண்டை உடைப்பு சம்பவமாக மாறியுள்ளது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.