திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கு திறப்பு விழாவில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டார். அப்போது, திருப்பத்தூர் மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மாநில பொதுச் செயலாளர் மற்றும் கூட்டமைப்பு தலைவர் நாகேந்திரன் தலைமையில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் முன்னிலையில் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் புகார்மனு ஒன்றை அளித்தனர்.
அந்தப் புகார் மனு குறித்து மாநில பொதுச் செயலாளர் மற்றும் கூட்டமைப்பு தலைவர் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஒரு சாராருக்கு மட்டுமே உறுப்பினர் அட்டையை வழங்கி உள்ளார். இது தொடர்பாகவும், தொழிலாளர்கள் சம்பந்தமாகவும் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் இன்று கோரிக்கை மனு அளித்துள்ளோம். அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இன்று (பிப். 15) மாலைக்குள் அமைச்சர் கே.சி.வீரமணி தகுந்த பதிலை அளிக்கவில்லை என்றால் நாளை தடையை மீறி வாணியம்பாடியில் உள்ள தொழிலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்றார்.
அவர்கள் அளித்த மனுவில், "10 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பரிசீலனை செய்து வழங்கப்படாமல் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை மரணம், விபத்து நிவாரண நிதி போன்ற ஆயிரம் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வழங்கப்படாமல் உள்ளது.
நான்கு மாத காலமாக புதிய 20 ஆயிரம் ஆன்லைன் பதிவு விண்ணப்பங்கள், பத்தாயிரம் புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு தொழிலாளர் வாரிய அட்டை வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க சொட்டு மருந்து அவசியம்' - அமைச்சர் வீரமணி