தேனி: ராஜஸ்தான் மாநிலத்தில் பணியின் போது நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டு, ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது.
தேனி அருகே பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் இன்பவள்ளி தம்பதியினரின் மகன் முத்து (35). இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு ரீனா என்ற பெண்ணுடன் முத்துவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியில் நடைபெற்ற ராணுவ பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் சிக்கி முத்து படுகாயம் அடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து, உடனடியாக சக ராணுவ வீரர்கள் முத்துவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தற்போது, உயிரிழந்த ராணுவ வீரர் முத்துவின் உடலை சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் அவரது உடல் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. பின்னர், மதுரை விமான நிலையத்தில் முத்துவின் உடலுக்கு மதுரை மாவட்டம் சார்பாக அரசு மரியாதை செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து அவசர ஊர்தி வாயிலாக முத்துவின் உடல் தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு, தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சிறிது நேரம் வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக தேனி மின் மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. அதையடுத்து, ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அப்போது அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் முத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அங்கு, ராணுவ வீரரின் உடல் அருகே அவரது தாய் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்