திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த புதுபூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (32). எலவம்பட்டி பகுதியிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்திவருகிறார்.
இவரது ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கந்திலி அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் திவ்யா (24) என்ற பெண் ஓட்டுநர் பயிற்சி கற்றுக்கொள்ள வந்துள்ளார்.
சத்தியமூர்த்தி ஆசைவார்த்தை பேசி திவ்யாவை காதல் வலையில் விழவைத்து திவ்யா பிஎட் படித்துக் கொண்டிருந்தபோது திருவண்ணாமலையில் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தையைப் பராமரிக்க முடியாத காரணத்தினால் திவ்யா கொட்டாவூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி தாத்தாவிடம் குழந்தையை வளர்த்துவந்தார். சத்தியமூர்த்தி அவ்வப்போது வந்து குழந்தை, மனைவியைப் பார்த்துச் சென்றுள்ளார்.
உறவுக்கார பெண்ணுடன் பழக்கம்
இந்த நிலையில் திவ்யாவின் உறவுக்கார பெண்ணான திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா என்பவருடன், சத்தியமூர்த்திக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடையில் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவாக மாறி அர்ச்சனாவை திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தோடு சத்தியமூர்த்தி இருந்துள்ளார். அர்ச்சனா சென்னையிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்துவருகிறார்.
இதையடுத்து சத்தியமூர்த்தி தனது மனைவி திவ்யாவிடம் தனக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது. நீ, நான், குழந்தை மூவரும் இறந்துவிடலாம் எனத் தெரிவித்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அப்போது திவ்யா நமக்கு பெண் குழந்தை உள்ளது. குழந்தையை வளர்க்க வேண்டும் என்று கூறி தற்கொலைக்கு மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி திவ்யாவை கொலை செய்ய மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவு
மனைவியைக் கொலைசெய்ய திட்டமிட்ட சத்தியமூர்த்தி செப்டம்பர் 25ஆம் தேதி திவ்யாவின் வீட்டிற்குச் சென்று, சாமி கும்பிட கோயிலுக்குச் சென்று வரலாம் எனக் கூறி திவ்யாவையும், குழந்தையையும் அழைத்துச் சென்றுள்ளார்.
எலவம்பட்டி அருகே உள்ள அவரது ஓட்டுநர் பயிற்சி அலுவலகத்திற்கு அழைத்துவந்து, திவ்யாவிற்கு இரண்டு தூக்க மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். மயங்கிய நிலையில் திவ்யாவை அருகிலுள்ள நிலத்திற்கு தூக்கிச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, குழந்தையுடன் சத்தியமூர்த்தி தப்பி ஓடியுள்ளார். இந்த வழக்கில் இரண்டு நாள்களாக தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தியை கந்திலி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி
இந்தநிலையில் அவர் காரில் எங்கோ சென்றது வாலாஜா சோதனைச்சாவடியில் பதிவாகி இருந்தது. இதையடுத்து வேலூர் மாவட்டம், வாலாஜா பகுதிகளில் சத்தியமூர்த்தியையும், குழந்தையையும் தேடும் பணி நடைபெற்றது. இதற்கிடையில் சத்தியமூர்த்தி ஒரு காணொலி பதிவை வெளியிட்டார்.
அதில் தனக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது, ஆகையால் என் மனைவியை நான் கொலை செய்துவிட்டு, நானும் என் குழந்தையும் தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம் என நாடகமாடி ஒரு காணொலியை வெளியிட்டார்.
இதனைக் கண்ட காவல் துறையினர் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு பகுதிகளில் தீவிரமாகத் தேடிவந்தனர்.
திடீர் திருப்பம்
இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி சென்னை போரூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் காரை நிறுத்திவிட்டு குழந்தையுடன் சத்தியமூர்த்தி சென்றதும், அங்கு செவிலியர் படிப்பு படித்துக்கொண்டிருந்த அர்ச்சனாவை கூட அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. இருவரும் குழந்தையுடன் செல்லும் சிசிடிவி பதிவு காவல் துறைக்கு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சத்தியமூர்த்தியின் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு விவகாரம் அம்பலமானது. அர்ச்சனாவின் செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தை சந்திரன் போரூர் காவல் நிலையத்தில் தன் மகளை சத்தியமூர்த்தி கடத்திச் சென்றதாகப் புகார் அளித்தார்.
கையும் களவுமாகப் பிடித்த காவல் துறை
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் பல இடங்களில் அவர்கள் செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகி இருந்தது. சத்தியமூர்த்தி தனது செல்போனில் புதிய சிம் வாங்கி மாற்றியதில் அவர் இருக்குமிடம் தெரியவந்தது. அதன் அடிப்படையில் நேற்று (அக். 9) தஞ்சாவூர் விரைந்த காவல் துறையினர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல் குழந்தையை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்திவந்த சத்தியமூர்த்தியைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
அதன் பின்னர் சத்தியமூர்த்தியை திருப்பத்தூருக்கு அழைத்துவந்து குற்றவியல் நடுவர் (மாஜிஸ்திரேட்) முன் முன்னிறுத்தி திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர். அர்ச்சனா, குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 331 பேருக்கு டெங்கு காய்ச்சல் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்