திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருடைய குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில் ஒன்பது பேருக்குமே நோய்த் தொற்று உறுதியானது. இதனால் மேலும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 13 பேர் சோலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் நோய்த் தொற்று பாதித்த ஓட்டுநர், வளர்த்துவந்த இரண்டு நாய்களில் ஒன்று நேற்று முன்தினம் இறந்தது. பின்னர், நேற்று மற்கறொரு நாய் குட்டியும் இறந்தது.
இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள், நோய் தொற்றால் நாய் இறந்திருக்கலாம் என்று சந்தேகித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, வருவாய் துறையினர் விண்ணமங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை பராமரிப்பு துறையினர் இறந்த நாயின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.