திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் படிப்பு வராத காரணத்தினாலும், குடும்பச் சூழல் காரணமாகவும் பள்ளிக்கு வராமல் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சேகரித்துள்ளார்.
இதில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாசரியப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் 31 பேர் பல்வேறு காரணங்களுக்காக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, வீட்டில் இருப்பதை அதிகாரிகளின் மூலம் அறிந்துள்ளார், ஆட்சியர்.
அதன் அடிப்படையில், நேற்று (நவ.7) பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வித் துறையினருடன் இணைந்து படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, மாணவர்களின் பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக் கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, தனது வாகனத்திலேயே அந்த மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்து, அறிவுரை வழங்கி மாணவர்களை வகுப்பிற்கு அனுப்பி வைத்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "மாவட்டம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய காரணமாக வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.
அவர்கள் அனைவரையும் மாவட்ட கல்வி நிர்வாகத்தின் சார்பாக, நேரடியாக அவர்கள் வீட்டிற்குச் சென்று, அவர்களுடைய குறைகளைக் கேட்டு அறிந்து அதை நிவர்த்தி செய்துள்ளோம். மேலும், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று படிக்கத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று கூறினார். மேலும், மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தஞ்சையில் இறந்தவர்களின் உடலை ரயில் பாதையில் சுமந்து செல்லும் கிராம மக்கள்.. காரணம் என்ன?