திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த புளனேரி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் சீனு (33). இவர் திருப்பத்தூர் அடுத்த பூரிமாணிக்கமிட்ட என்ற பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள ஆசிரமம் பகுதியில் உள்ள சகுந்தலா என்பவர், தனது வீட்டில் வளர்க்கும் கோழி அருகிலுள்ள 90 அடி கிணற்றில் திடீரென விழுந்துள்ளது.
இதைப் பார்த்த சகுந்தலா அருகிலிருந்த தனது உறவினர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள் சீனுவை அழைத்து கிணற்றில் உள்ள கோழியை மீட்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து சீனு அந்த தண்ணீர் இல்லாத 90 அடி ஆழமுள்ள கிணற்றில் கயிறு கட்டி இறங்கியுள்ளார்.
அப்போது திடீரென்று கயிறு அறுந்து கிணற்றில் விழுந்து படுகாயம் அடைந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் சீனுவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். கடும் முயற்சிக்கு பிறகு சீனு பத்திரமாக மீட்கப்பட்டார். கிணற்றில் விழுந்ததில் அவருக்கு தலையில் லேசான காயமும், காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உறவினர் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த நபர் கோழியைப் பிடிக்க முயலும் போது, 90 அடி கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கிணற்றில் விழுந்த கோழியும் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும்: வதந்தியை கிளப்பியவர் கைது!