திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபுதேவா (42). இவருக்கும், இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் (48) என்பவரின் குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிரபுதேவாவிற்கும், கோவிந்தராஜூக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் கோவிந்தராஜ் ஆசிட் பாட்டிலை எடுத்து வந்து, பிரபுதேவா மீது ஊற்றியுள்ளார். மேலும், அதை தடுக்க வந்த பிரபுதேவாவின் தாய் சென்னம்மாள் (54) மீதும் ஊற்றியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தாய், மகன் இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பிரபுதேவா, திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு திருப்பத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி ஹசீனாபானு, ஆசிட் ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட கோவிந்தராஜுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இதனையடுத்து, கோவிந்தராஜை திருப்பத்தூர் நகர போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - 4 பேரை காவலில் எடுத்து டெல்லி போலீஸ்! அடுத்த நகர்வு என்ன?