திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகில் நடைபெற்ற கரோனா நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சுங்கச்சாவடியில் வரும் வாகனங்களுக்கு லைசால் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.
பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு உடற்சூட்டை அறியும் கருவி முலம் பரிசோதிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சிவனருள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மிக கடுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், தொடர் வண்டி நிலையம், சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா நோய் குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் 24 மணி நேர கண்காணிப்புக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு சேவை மையம் நிறுவப்பட்டுள்ளது.
கரோனா நோய் குறித்து தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும், சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.