திருப்பத்தூர்: அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் மதுமிதா. இவர்கள் இருவரும் ஓசூரிலிருந்து கார் மூலம் அரக்கோணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். கார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் முன்னே சென்ற தனியார் பேருந்தை கார் முந்திச் செல்ல முயன்று உள்ளது. இதில் எதிர்பாராத விதமாக கார் மீது பேருந்து மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புகளின் மீது மோதி கார் நொறுங்கியது. இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக சிறுகாயங்களுடன் காரில் இருந்த தந்தை மற்றும் மகளை மீட்டனர். பின் அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல், ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் எதிர்புறம் வந்த ஆட்டோ மீது வாணியம்பாடி நோக்கி சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பவர் படுகாயம் அடைந்து உள்ளார். இந்த நிலையில் அவருக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரபீக் அஹமது, சாதிக் அஹமது, யாஸீன் அஹமது ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஏலகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனம் வாணியம்பாடியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் மீது சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து 50 அடி ரயில்வே மேம்பால தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் இரு இளைஞர்கள் 50 அடி ரயில்வே மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். மேலும் ஒரு இளைஞர் சாலையிலேயே விழுந்த நிலையில் மூவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த மூன்று வெவ்வேறு விபத்துகள் குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் மற்றும் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் ஒரு பகுதியில் தொடர்ந்து 3 விபத்துகள் நிகழ்ந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஏலச்சீட்டு விவகாரத்தில் மாமன் மகனை கொலை செய்த இளைஞர்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?