திருப்பத்தூர்: வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த 2ஆம் தேதி வாணியம்பாடி சார்பு நீதிமன்ற ஊழியர் ரங்கநாதன் (55) என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ராஜ்குமார் என்பவர் ரங்கநாதனுக்கு உதவி செய்வது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து சென்றுள்ளார்.
பின்னர் ரங்கநாதனின் ஏடிஎம் கார்டினை பயன்படுத்தி ரூ.23 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து ரங்கநாதன் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் மையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார், இளைய நகரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், தேவமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய மூன்று பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம், 5 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ.9500 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்; தொழிலதிபர் உயிரிழப்பு..!