திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் தமிழ்நாடு அரசின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவள்ளி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் வருவாய்த்துறை, வேளாண்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி கலந்துகொண்டார்.
முகாமில் மாவட்ட கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி பேசும்போது, "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வருங்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துரைத்து நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். கல்வி மட்டுமே இருந்தால் அவர்களுக்கு வீடு, நிலம் எதுவும் தேவையில்லை. கல்வி அவர்களுடைய வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு வழிகாட்டியாக இருக்கும்" என்றார்.
மேலும் கொரோனோ வைரஸ் நோய் குறித்த தகவலை வாட்ஸ்அப்பில் பரப்புவதை யாரும் உண்மை என நம்ப வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம் - மருத்துவர் ராஜா!