திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளானேரி, அச்சமங்கலம், மல்லபள்ளி, பெரியகரம், சின்னகந்திலி, ஆகிய ஐந்து கிராமங்களில் வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி இன்று அம்மா மினி கிளினிக்கை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.
அப்போது, சின்னக்கந்திலி பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் ஊரில் இருக்கும் தார் கலவை தொழிற்சாலையில் இருந்து நச்சுத்தன்மை வாய்ந்த காற்று வெளியேறி வருவதாகவும், அதை சுவாசிப்பதால் தங்கள் பகுதி மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
எனவே, தார் கலவை தயாரிக்கும் ஆலையை வேறு இடத்திற்கு இடம்மாற்ற அல்லது நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். பலமுறை தார் கலவை ஏற்றிச்செல்லும் லாரியை சிறைபிடித்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களிடம் ஒப்படைத்தும், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஆதங்கத்தோடு, தங்கள் கோரிக்கையை மக்கள் முன்வைத்தாலும், அதனை காதில் வாங்காதவாறும், மக்களை கண்டுகொள்ளாமலும் அமைச்சர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காங். அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மனு!