கரோனா இரண்டாம் அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள வார சந்தை மைதானத்தில் இயங்கி வரும் உழவர் சந்தையை கூடுதல் பேருந்து நிலையத்திற்கும், காய்கறி கடைகளை இசுலாமியா கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.
இதனை அறிந்த காய்கறி வியாபாரிகள், நள்ளிரவில் வார சந்தை மைதானத்தில் ஒன்று கூடி காய்கறி கடைகள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடத்தில் ஈடுபட்டனர். போராடத்தில் ஈடுபட்டவர்களுக்கு வணிகர் சங்கம் பேரமைப்பு நிர்வாகிகள் ஆதரவளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் நகராட்சி அலுவலக வளாகத்தில் வணிகர் சங்கம் பேரமைப்பு நிர்வாகிகள், காய்கறி வியாபாரிகளுடன் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், வார சந்தை மைதானத்தில் இயங்கி வரும் உழவர் சந்தையை நாளை முதல் கூடுதல் பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்தும், தினசரி காய்கறி கடைகள் அதே இடத்தில் அரசின் விதிகளை பின்பற்றி நடுத்தவும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இரண்டு, மூன்று கடைகள் வைத்திருந்தால் அதில் ஒரு கடை மட்டுமே நடத்த அனுமதி, வார சந்தை மைதானத்திற்கு வெளியில் சாலை ஓரத்தில் கடைகள் வைக்க கூடாது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் கடையை சூறையாடிய காவலர்!