திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு கடந்த 6ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது
வாணியம்பாடியில் உள்ள ஜெயின் மருதர் கேசரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்கு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
இன்று இந்தத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றன.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் டி.கே. ராஜா மாம்பழச் சின்னத்தில் போட்டியிட்டு 67,905 வாக்குகளைப் பெற்றார்.
திமுக வேட்பாளர் நல்லதம்பி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 95,067வாக்குகளைப் பெற்றார். இதன்மூலம் நல்லதம்பி 27,162 கூடுதலான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.சி. வீரமணி 87,118 வாக்குகளைப் பெற்றார். இவருடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தேவராஜ் 88,024 வாக்குகள் பெற்று 906 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் குமார் 87,901 வாக்குகள் பெற்றார். திமுக கூட்டணி வேட்பாளர் முகமது நயிம் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு 82,773 வாக்குகளைப் பெற்றார்.
அதிமுக வேட்பாளர் செந்தில் குமார் 5,128 கூடுதலான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
ஆம்பூர்
திமுக வேட்பாளர் வில்வநாதன் 90,476 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் நசர் முகமது 70,244 வாக்குகளைப் பெற்றார்.
திமுக வேட்பாளர் வில்வநாதன் 20,232 கூடுதலான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் அலுவலர் வெற்றிச் சான்றிதழ்களை வழங்கினார்.