திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த அக்ராஹரம் பூஞ்சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (29). எலக்ட்ரீசியன் வேலை செய்துவந்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த திவ்யா (19) என்ற இளம்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக கிருஷ்ணமூர்த்தி வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திவ்யாவை, கிருஷ்ணமூர்த்தி வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார்.
இந்த விஷயத்தை திவ்யா தனது பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து திவ்யாவின் பெற்றோர் வரதட்சணை பணத்தை கொடுத்துவிடுவதாகக் கூறியுள்ளனர். இந்த நிலையில் திவ்யா வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், திவ்யாவின் கணவர் கிருஷ்ணமூர்த்திதான் அவரைக் கொன்று தூக்கில் தொங்கவிட்டதாகவும் திவ்யாவின் பெற்றோர் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நாட்றம்பள்ளி காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்திவருகின்றனர்.