வேலூர்: வேலூரில் தமாகா பிரமுகர் பழனிவேல் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (மே 3) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன், "கரோனா தொற்றுப்பரவாமல் இருக்க மக்கள் அனைவரும் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கரோனாவைக் கட்டுப்படுத்த மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஆம்பூரில் மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலையினை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் நலனில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் மாதா, பிதா குருவுக்கு மரியாதை செலுத்த வேண்டும்" என்றார்.
மே 9இல் தமாகா போராட்டம்: தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அரசு இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மதத்தின் மீது விமர்சனங்கள் இருக்கக்கூடாது. மதத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஜனநாயக நாடு என்பதால், மதங்களை விமர்சிக்கலாம் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. அதனை மீறுபவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும்.
தமிழ்நாட்டில் வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். முக்கிய வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. சொத்துவரி மேலும் சுமையை அதிகரித்துள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே இது தொடர்பாக ஈரோட்டில் வரும் 9ஆம் தேதி தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக கல்வி நிறுவனங்களில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் குறைக்கப்படாமல் வழங்க வேண்டும்" என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்'!