திருப்பத்தூர்: திருப்பத்தூரை அடுத்த களரூர் கிராமப் பகுதியில் மாரியம்மன் கோயில் மாபெரும் குடமுழுக்குத் திருவிழா நடைபெற்றது. விழாவில் விடியற்காலை முதல் மங்கல இசை, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை, குடமுழுக்கு, திருக்கல்யாணம், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
மேலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள்பெற்றனர். அம்மன் கோயில் திருவிழா என்றாலே பக்தர்கள் மற்றும் இளசுகள் முதல் பெரியோர்கள் வரை தங்களது விருப்ப தெய்வங்கள் - கட்சித் தலைவர்கள், நடிகர்களுக்கு பேனர் வைத்துக் கொண்டாடுவதை நவீனகால மரபாகவே வைத்துள்ளனர்.
அதிலும் சிலர் பலவிதமான வெரைட்டியுடன் கூடிய பேனரை வைத்து ஏரியாவில் தங்களது இருப்பை (அட்ராசிட்டி) வெளிப்படுத்தி கெத்து காட்டுவதில் இதுபோன்ற பொது விழாக்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதுபோலவே அதிலும் மாறுபட்ட ஒரு பேனர் வைத்த நிகழ்வு மேலே குறிப்பிட்ட களரூர் அம்மன் கோயில் திருவிழாவில் நடந்தேறியுள்ளது.
இந்த பேனர்தான் சமூக வலைதளத்தில் தற்போதைய ஹாட்-டாபிக். அப்படி என்னதான் இதில் ஹாட்-டாபிக் என்றால், ஹாட்டுக்கே பெயர்போன இளசுகளின் கனவுக்கன்னி சன்னியின் புகைப்படம்தான்.
இதில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புடைசூழ இடதுபுற கீழ் மூலையில் தியான புன்னகையுடன் தனது ரசிக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் சன்னி லியோன். திருவிழாவுக்கு வரும் சிலர் இந்த பேனரைப் பார்த்து சாரி (Sorry)... சன்னியைப் பார்த்து வாயைப் பிளக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பலரும் அம்மன் கோயில் திருவிழாவில் இப்படியா என 'உச்' கொட்டவும் செய்கிறார்கள்.
எது எப்படியோ இந்த பேனர் வைரலாகியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாளைய சமுதாயத்தின் தூண்களான இளைஞர்கள் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்த்து பொதுநலத் தொண்டுகள், சேவைகள், சமூகத்திற்கு பயனுள்ள பல அறிவார்ந்த செயல்களில் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.