தமிழ்நாடு முழுவதும் நாளைய தினம் ( செப்.13) நீட் தேர்வு நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியிலும், ஏலகிரி மலையில் உள்ள தொன்போஸ்கோ கல்லூரியிலும் மொத்தம் 2 நீட் தேர்வுக்கான மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் வாணியம்பாடியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் 900 பேரும்; ஏலகிரி மலையிலுள்ள தொன்போஸ்கோ கல்லூரியில் 900 பேரும் என மொத்தம் ஆயிரத்து 800 நபர்கள் அமர்ந்து தேர்வு எழுதும்படியாக இருக்கைகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
அதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் செய்துகொண்டிருக்கும்போது, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் இரண்டு தேர்வு மையங்களிலும் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட துணை ஆட்சியர் முனீர் கூறுகையில், "அனைவரும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு முகக்கவசம், கிருமி நாசினிகளை பயன்படுத்தியபின் போதுமான இடைவெளியுடன் அமரச் செய்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், வட்டாட்சியர் மோகன், துறைசார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: 'மாணவி தற்கொலைக்கு பாஜகவும் அடிமை அதிமுகவும் தான் காரணம்' - உதயநிதி