திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றும் காலணி தொழிலாளர்களுக்கு, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சரிவர ஊதியம் மற்றும் போனஸ் வழங்காததைக் கண்டித்து, காலணி தொழிலாளர்கள் ஏற்கனவே இரண்டு முறை தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அன்றைய நாளில் போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களிடம், ஒரு வார காலத்திற்குள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி ஊதியம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்ததன் பேரில், தொழிலாளர்கள் போராட்டத்தை நிறுத்தி, மீண்டும் பணிக்கு திரும்பினர்.
இந்த நிலையில், ஒரு வாரகாலத்திற்கு மேலாகியும், தற்போது வரையிலும் தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் போனஸ் வழங்கவில்லை எனக் கூறி, தொழிற்சாலையில் பணியாற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து, இந்த போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் வட்டாட்சியர் குமாரி மற்றும் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பின்னர், அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு உடன்படாமல் தொழிலாளர்கள், தொழிற்சாலை வளாகத்தின் உள்ளே சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இதன் காரணமாக சம்பந்தபட்ட தொழிற்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “நான் எலும்பு மருத்துவர்.. என்னால் பார்க்க முடியாது” - காய்கறி கடையை ஒப்பிட்டு பேச்சு.. வைரலாகும் வீடியோ!