திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்துவரும் சூழலில், ஜவ்வாது மலையில் இருக்கும் வனவிலங்குகள் தண்ணீர்த் தேடி அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கு வருகின்றன. குறிப்பாக, அரியவகை மான்கள் தண்ணீர்த் தேடி கிராம பகுதிகளுக்கு அடிக்கடி வருகின்றன.
இந்நிலையில் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள மடு என்ற இடத்தில், 10 வயது நிரம்பிய மான் ஒன்று, தண்ணீர்த் தேடிவந்துள்ளது. அப்போது அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் மானை துரத்திச்சென்று கடித்ததில், மான் துடிதுடித்து உயிரிழந்தது.
இதனையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில், திருப்பத்தூர் வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உயிரிழந்த மானுக்கு உடல்கூறு பரிசோதனை செய்து அருகில் உள்ள வனப்பகுதியில் புதைத்தனர்.
தண்ணீர்த் தேடிவந்த மான் உயிரிழந்ததால், வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்குப் போதிய தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வனத் துறை அலுவலர்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். மான் உயிரிழந்த விவகாரம் குறித்து வனத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் பசியில் தவிக்கும் வனவிலங்குகள்... உதவி கேட்கும் பூங்கா காப்பாளர்கள்!