கரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 3 நாட்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்ட நிலையில் சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் என்ற பகுதியில் சாராய விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அங்கு சாராயம் வாங்க குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த குடிமகன்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இதனால் கரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சாராயம் விற்பனை செய்த வீட்டை முற்றுகையிட்டனர். உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் விற்பனைக்காக வைத்திருந்த கள்ளச்சாராய பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய சாராய வியாபாரியை தேடி வருகின்றனர்.